ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்தபோது பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை.

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சவுதியில் இருந்து கேரளா திரும்பிக் கொண்டிருந்த பெண்ணுக்கு வானத்தில் பறக்கும்போதே ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சவுதி அரேபியாவில் பணிபுரியும் கேரளப் பெண் ஜோஸ் சிசிமோல். அவர் நேற்று அதிகாலை 3.10 மணிக்கு தமாம் விமான நிலையத்தில் இருந்து கொச்சினுக்குச் செல்ல விமானம் ஏறினார். அவரின் வயிற்றில் 30 வார சிசு இருந்தது.

அங்கிருந்து கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையில் இருந்து சுமார் 35,000 அடி உயரத்தில் இந்தியாவை நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. அப்போது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பயணத்தில் மருத்துவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று அறிவிப்பு வெளியானது. யாரும் இல்லாததால் மருத்துவ அவசரம் என்று அறிவிக்கப்பட்டு, சிமானம் மும்பையை நோக்கித் திருப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த வில்சன் என்னும் செவிலி உதவியாளர் சிசிமோலுக்கு உதவ முன்வந்தார்.

குறை மாதத்தில் பிறந்த குழந்தை

இதைத் தொடர்ந்து விமானத்திலேயே சிசிமோலுக்கு குறை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மும்பையில் விமானம் தரையிறங்கிய உடன், அவருக்காகக் காத்திருந்த ஆம்புலஸில் தாயும், சேயும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்தேரியில் உள்ள ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்துப் பேசிய ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ''இதுவொரு எதிர்பாராத சம்பவம். இதுவே எங்களின் முதல் அனுபவம். சிசிமோலின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம். வில்சன் மற்றும் பிரசவத்துக்கு உதவிய குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

எங்கள் விமானத்தில் குழந்தை பிறந்ததால், அவருக்கு ஆயுள் கால இலவச விமானப் பயணத்தை நிறுவனம் வழங்கும்'' என்று தெரிவித்தார்.

Related Posts