பின்வாங்கிய விக்கினேஷ்வரன்.

வட மாகாண சுகாதார அமைச்சர் பி சத்தியலிங்கம், மற்றும் மீன்பிடி அமைச்சர் டென்னீஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால விடுமுறையை இரத்து செய்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் பொறுப்பேற்பராயின், அல்லது அமைச்சர்கள் இருவர் தொடர்பிலான சுயாதீன விசாரணைக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பாராயின் குறித்த தீர்மானத்தினை மாற்றிக்கொள்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் வட மாகாண முதலமைச்சரின் குறித்த கடிதத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இதுவரை எந்தவித பதிலினையும் அனுப்பவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் எம் கே விசாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண சுகாதார அமைச்சர் பி சத்தியலிங்கம், மற்றும் மீன்பிடி அமைச்சர் பி டென்னீஸ்வரன், ஆகியோருக்கு பணிக்கப்பட்டுள்ள உத்தரவினை மாற்றிக்கொள்வாராயின், விக்கினேஸ்வரனிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களின் தீர்மானத்தினையும் மாற்றிக்கொள்வதாக இரா சம்பந்தன் விக்கினேஷ்வரனிற்கு ஏற்கனவே அனுப்பிய கடிதத்தில், அறிவித்துள்ளார்.

அத்துடன் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி வழங்கிய ஆதரவினை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் வட மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் தனது பெரும்பான்மையை ஆளுனரிடத்தில் நிரூபிக்கமுடியும்.

Related Posts